கோழிகள் காக்கைகளைப் போல அல்ல......

கோழிகள் காக்கைகளைப் போல அல்ல......

எல்லா அந்திகளுக்கும்

ஒரே நிறம் இருப்பதில்லை

சில நீலத்துடனும்

சில சிவப்புடனும்

சில புத்தருடனும்

டீ கோப்பையுடனும்

நம்மை ஆக்கிரமிக்கின்றன  

ஊரடங்கச் செய்து

வைகாசியோடு மூன்று திங்கள்

கடந்து விட்டது

வரும் முன் காப்பது பழங்கதை

நாங்கள் வந்தாலும்

பார்த்து கொண்டு தான்

இருக்கிறோம்

கள்ளும் நுங்கும்

தங்கள் கடமையை முடித்து

காற்றின் வழியே

கடுக்காய்களை வரவேற்கின்றன

அணில்களின்

வசந்த காலத்திற்கும்

ஒரு முடிவு

இருக்கத் தான் செய்கிறது

தந்தி அடிக்கும்

தூரமெல்லாம்

திறன்பேசித் தூரங்களாக

மாறிய போதும்

மனங்களின் தூரம் மட்டும்

குறைவதில்லையே !

வீட்டருகின் பனையில் இருந்தாலும்

குரலெடுத்துக்

கத்தும் போது மட்டுமே

கண்களுக்குத் தெரிகின்ற

ஆலாக்கள் போல  

வரும் முதுவேனிலில்

பழுக்க காத்திருக்கும்

வேப்பம் பழங்களை உத்தேசித்து  

காக்கைகள்

கூடுகளை பிண்ணுவதில்

தீவிரமாய் முனைந்துள்ளன

குயில்களோ

காக்கைகளை ஏமாற்றுவதில்

தங்கள் வித்தைகளின்  

திறனைச் சோதித்துக்

கொண்டு இருக்கின்றன

குயில்கள் ஒன்றும்

காக்கைகளைப் போல்

முட்டாள் இல்லை

உழைப்பதற்கு.  

பல வண்ணக்

கோழிகள் மட்டுமே

வயிறு மட்டுமே

உயிர் என்று

குதூகலமாக மேய்கின்றன

அவை

மனிதர்களை நம்புகின்றன

காக்கைகளைப் போல

சுதந்திரத்தை அல்ல. 

Comments